Wednesday, March 6, 2013

தண்டச் சோற்றுத் தடிராமன்கள்

தண்டச் சோற்றுத் தடிராமன்கள்

எப்படியோ அரசனை ஏமாற்றி, மட நாட்டின் முதல் மந்திரி ஆகி விட்டார், பரமார்த்த குரு. அவருக்குத் துணையாகச் சீடர்களும் அரண்மனை ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர்.

"நம் குரு முதல் அமைச்சர் ஆகிவிட்டதால், இனி கவலையே பட வேண்டாம்" என்று சந்தோஷம் கொண்டனர், ஐந்து சீடர்களும்

ஒருநாள், "நமது நாட்டுப் படை பலம் எப்படி இருக்கிறது?" என்று பரமார்த்தரிடம் கேட்டான் மட மன்னன்.

இதுதான் நல்ல சமயம் என்ற நினைத்தார், பரமார்த்தர். "மன்னா! உங்களிடம் சொல்லவே நாக்குக் கூசுகிறது. நம் நாட்டு யானைகள் எல்லாம் பட்டினியால் வாடி இளைத்து, பன்றிகள் போல் ஆகிவிட்டன!" என்று புளுகினார்.

சீடர்களும், "ஆமாம் அரசே! இப்படியே கவனிக்காமல் விட்டால், போரில் கட்டாயம் தோல்வியே ஏற்படும்" என்று ஒத்து ஊதினார்கள்.

அதைக் கேட்ட மன்னன், "அப்படியா? இரண்டு யானைகளை இங்கே அழைத்து வாருங்கள்" என்று கட்டளை இட்டான்.

மட்டியும் மடையனும் ஓடிச் சென்று இரண்டு பன்றிக் குட்டிகளை அரண்மனைக்குள் ஓட்டி வந்தனர்.

அதைப் பார்த்த அரசன், "சே! சே! பார்க்கவே சகிக்கவில்லையே! இவையா நம் நாட்டு யானைகள்?" என்று கேட்டான்.

முதலில் மட மன்னனுக்குக் கொஞ்சம் சந்தேகம் எற்பட்டது. "இது யானை என்றால், தும்பிக்கையைக் காணோமே?" என்று கேட்டான்.

"மன்னா! எல்லாம் முதலில் தும்பிக்கையுடன் இருந்த யானைகள் தான். பட்டினி கிடப்பதால் உடலும் மெலிந்து விட்டது, தும்பிக்கையும் சுருங்கி விட்டது" என்று விளக்கினார் பரமார்த்தர்.

"இவை மறுபடியும் பழைய உருவம் அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான் மடமன்னன்.

"மன்னா! இன்னொரு விஷயம். அதையும் பாருங்கள், பிறகு வைத்தியம் சொல்கிறோம்" என்றார் குரு.

"நமது நாட்டுக் குதிரைப் படைகளும் இதே போல் இளைத்து விட்டன. எல்லாம் ஆட்டுக் குட்டிகள் மாதிரி ஆகிவிட்டன!" என்றான் மூடன்.

அப்படியா? வியப்பாக இருக்கிறதே! என்ன செய்யலாம் சொல்லுங்கள் என்றான் மன்னன்.

மன்னா! நாங்கள் அருமையான திட்டம் ஒன்று வைத்துள்ளோம். அதன்படி ஆயிரம் பொற்காசுகள் செலவாகும். அந்த ஆயிரம் பொற்காசுகளையும் எங்களிடமே கொடுத்து விடுங்கள். நாங்கள் எல்லாவற்றையும் பழையபடி குண்டாக்கி விடுகிறோம்! என்றனர், முட்டாளும், மூடனும்

மடமன்னன் பெரிய கஞ்சன். அதனால் ஆயிரம் பொற்காசு செலவழிக்க மனம் வரவில்லை.

"வேறு ஏதாவது யோசனை இருந்தால் சொல்லுங்கள்!" என்று கட்டளையிட்டான்.

"சே! நம் திட்டம் எல்லாம் பாழாகி விட்டதே!" என்று வருந்தினார், பரமார்த்தர். சீடர்களுக்கும் ஆத்திரமாக இருந்தது

"அரசே! எல்லா யானைகளையும், குதிரைகளையும் நாட்டில் உள்ள வயல்களில் மேயவிடுவோம்! கொஞ்ச நாளில் சரியாகிவிடும்!" என்றான் மண்டு.

"இதை வேண்டுமானால் செய்யலாம்!" என்றான் மடமன்னன்.

பரமார்த்தரின் ஆணையின்படி, மடநாட்டில் உள்ள பன்றிகள், ஆடுகள் அனைத்தும் அவிழ்த்து விடப்பட்டன.

எல்லாம் சேர்ந்து கொண்டு, குடி மக்களின் வயல்களில் சென்று மேயத் தொடங்கின. இரண்டே நாளில் எல்லா வகையான தானியங்களும் பாழாகி விட்டன.

அடுத்த மாதமே நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்டது. பலபேர் சோற்றுக்கே வழியில்லாமல் இறந்தனர்.

பரமார்த்தரும், சீடர்களும் ஒரு பயனும் இன்றித் தண்டச் சோற்றுத் தடிராமன்களாக இருப்பதைக் கண்ட மன்னன், எல்லோரையும் விரட்டி அடித்தான்.

அடடா! எப்படியாவது ஆயிரம் பொற்காசுகளைச் சம்பாதித்து விடலாம் என்று நினைத்தோம். கடைசியில் இப்படிப் பாழாகி விட்டதே! என்று புலம்பியபடி பழையபடி மடத்துக்கே திரும்பினார்கள்.
நரகத்தில் பரமார்த்தர்

மட்டியும் மடையனும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, கவலையோடு இருந்தனர்.

மண்டுவும் மூடனும் போனாரே! எங்கள் குரு செத்துப் போனாரே! என்று மூக்கால் அழுது கொண்டு இருந்தனர்.

"இனி மேல் யார் சுருட்டுக்கு நான் கொள்ளி வைப்பேன்? எங்களைத் தனியாக விட்டுட்டு, இப்படி அநியாயமாச் செத்துட்டீங்களே!" என்று ஒப்பாரி வைத்தான், முட்டாள்

அதன் பிறகு, ஐந்து சீடர்களும் மடத்துக்கு எதிரே தெருவில் கட்டிப்பிடித்து உருண்டார்கள்.

"செத்துப்போன நம் குரு, எங்கே போயிருப்பார்?" என்றான் மட்டி

"எமலோகத்துக்குப் போனால் பார்க்கலாம்"

"ஒரு வேளை, சொர்க்கத்துக்குப் போயிருப்பாரோ?"

"நம் குரு நிறைய பாவம் செய்தவர். அதனால் நரகத்துக்குத் தான் போயிருப்பார்"

முட்டாளும் மூடனும் இப்படிப் பேசிக் கொண்டு இருந்தனர்.

"நாமும் நரகத்துக்குப் போனால் நம் குருவைப் பார்க்கலாமே!" என்று யோசனை சொன்னான், மண்டு.

"நம் குருவை மீண்டும் பார்ப்பதற்கு இது தான் ஒரே வழி!" என்று குதித்தான் மடையன்.

உடனே மண்டுவும் மூடனும் கைகோர்த்தபடி, தோட்டத்தில் இருந்த கிணற்றில் குதித்தனர்.

முட்டாளோ, கையில் இருந்த கொள்ளிக் கட்டையால் தலையில் நெருப்பு வைத்துக் கொண்டான்.

சற்று நேரத்துக்கெல்லாம், பரமார்த்த குருவின் அருமைச் சீடர்கள் ஐந்து பேரும் உயிரை விட்டனர்.

எங்கு பார்த்தாலும் ஒரே புகை மயமாக இருந்தது. சீடர்களுக்கோ, ஒன்றுமே புரியவில்லை.

"நாம் தான் செத்து விட்டோமே, மறுபடியும் இப்போது எங்கே இருக்கிறோம்?" என்று கேட்டான் மட்டி.

அப்போது, "அதோ பாருங்கள், நரலோகம்!" என்று கத்தினான் மடையன்.

நரகத்திற்கு வந்து சேர்ந்து விட்டதை உணர்ந்த சீடர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

"வாருங்கள், நம் குருவைத் தேடிப் பார்ப்போம்!" என்று ஒவ்வொரு இடமாகப் பரமார்த்தரைத் தேடிக் கொண்டே சென்றார்கள்.

ஓரிடத்தில் பெரிய பெரிய செக்குகள் சுழன்று கொண்டு இருந்தன. பாவம் செய்த சிலரை அதனுள் போட்டு நசுக்கிக் கொண்டு இருந்தனர்.

அதைப் பார்த்த மட்டியும் மடையனும், "நம் குரு, இதன் உள்ளே இருந்தாலும் இருப்பார்!" என்று சொன்னபடி செக்குக்குள் தலையை விட்டார்கள்.

அவ்வளவுதான்! "ஐயோ! ஐயையோ!" என்று தலை நசுங்கி, ரத்தம் ஒழுகக் கீழே விழுந்தனர்.

இன்னொரு இடத்தில், உயரமான கொப்பரைகளில் எண்ணெய் கொதித்துக் கொண்டு இருந்தது.

அதைப் பார்த்த முட்டாள், "நம் குருவை இந்தக் கொப்பரையில் தான் போட்டிருப்பார்கள்!" என்று கூறிக்கொண்டே, கொப்பரைக்குள் எகிறிக் குதித்தான்!

முட்டாள் விழுவதைக் கண்ட மூடன், தானும் ஓடிப் போய் ஒரு கொப்பரையில் குதித்தான்!

கொதிக்கும் எண்ணெய் உடல் முழுவதும் பட்டதும், லபோ திபோ என அலறியவாறு இருவரும் சுருண்டு விழுந்தனர்.

மண்டு மட்டும் பல இடங்களில் பரமார்த்தரைத் தேடிக் கொண்டே சென்றான்.

நரக லோகத்தின் சனி மூலையில் ஏராளமான விறகுக் கட்டைகளை வைத்துத் திகு திகு என்று எரியும் அடுப்பைக் கண்டான்.

நம் குரு இந்த நெருப்புக்கு உள்ளே ஒளிந்து கொண்டு இருந்தாலும் இருப்பார் என்றபடி அதற்குள் நுழைந்தான்.

அடுத்த கணம், "ஆ, நெருப்பு! அம்மாடி நெருப்பு!" என்று கதறியவாறு விழுந்து புரண்டான்.

இதே சமயத்தில், நரக லோகத்தில் கட்டப்பட்டு இருந்த விஷ மண்டலத்தில் பரமார்த்தர் அலறிக் கொண்டு இருந்தார்.

அவரைச் சுற்றிலும் ராட்சத தேள்களும், பாம்புகளும், நண்டுகளும் படையெடுத்து வந்தன.

"ஐயோ, தேளே! நீ வாழ்க! உன் கொடுக்கு வாழ்க! என்னை மட்டும் கொட்டாதே!" என்று கும்பிட்டார்.

அதற்குள் ஐந்து சீடர்களும் அவர் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

"ஐயோ! பாம்பு, பாம்பு!" என்று அலறியபடி திண்ணை மேலிருந்து தடால் என்று கீழே விழுந்தார், பரமார்த்தர்.

சீடர்கள் அனைவரும் ஓடி வந்து பார்த்தார்கள்.

அப்பொழுதுதான் பரமார்த்தர் சுற்றும் முற்றும் பார்த்தார். "நல்ல காலம்! மடத்தில் தான் இருக்கிறேன். நரக லோகத்தில் மாட்டிக் கொண்டது போல வெறும் கனவுதான் கண்டிருக்கிறேன்!" என்று மகிழ்வுடன் தொப்பையைத் தடவிக் கொண்டார்.

சீடர்களும் மகிழ்ச்சியுடன் குதித்தார்கள்.

சொர்க்கம் என்ற சோற்று மூட்டை






சொர்க்கம் என்ற சோற்று மூட்டை

பரமார்த்தர் எங்கோ வெளியே சென்றிருந்தார். சீடர்கள் மட்டும் திண்ணையில் இருந்தனர். அப்போது புளூகன் ஒருவன் அங்கே வந்தான். திண்ணையில் படுத்தபடி, "அப்பாடா! இப்போதுதான் சொர்க்கத்தில் இருப்பது மாதிரி இருக்கிறது!" என்று கூறினான்.

அதைக் கேட்ட மட்டிக்கு வியப்பாக இருந்தது. "அப்படியானால் நீங்கள் சொர்க்கம் போய் இருக்கிறீர்களா?" என்று கேட்டான்.

"நேராக அங்கே இருந்துதான் வருகிறேன்!" என்றான் புளுகன்.

"அடேயப்பா! எங்களால் சந்திரலோகமே போக முடியவில்லை. நீங்கள் எப்படிச் சொர்க்க லோகம் போய் வந்தீர்கள்?" எனக் கேட்டான், மடையன்.

"சொர்க்கத்தில் யார் யார் இருக்கிறார்கள்?" என்று விசாரித்தான் முட்டாள்.

"உங்கள் குருவுக்குக் குருவான சோற்று மூட்டை அங்கே தான் இருக்கிறார்" என்றான் புளுகன்.

"அப்படியா? அவர் நலமாக இருக்கிறாரா?" என்று கேட்டான் மண்டு.

"ஊகும்! பேர் தான் சோற்று மூட்டையே தவிர சோற்றுக்கே தாளம் போடுகிறார்! கந்தல் துணிகளைக் கட்டிக் கொண்டு, பைத்தியம் மாதிரி திரிகிறார்! பார்ப்பதற்குப் பாவமாக இருக்கிறது!" என்றான் புளுகன்.

"பூலோகத்தில் இருந்த போது சுகமாக இருந்திருப்பார்..... அங்கே போய் இப்படிக் கஷ்டப்படுகிறாரே!.. என்று துக்கப்பட்டான் மூடன்.

"ஐயா நீங்கள் மறுபடி சொர்க்கத்துக்குப் போவீர்களா?" என்று மட்டி கேட்டதும், "ஓ நாளைக்கே போனாலும் போவேன்!" என்றான் புளுகன்.

"அப்படியானால், எங்களிடம் இருக்கிற புதுத் துணிகளை எல்லாம் தருகிறோம். கொஞ்சம் பணமும், சுருட்டும் கொடுக்கிறோம். எல்லாவற்றையும் கொண்டு போய், எங்கள் குருவுக்குக் குருவிடம் தந்து விடுங்கள்."

"புளுகனோ மகிழ்ச்சியோடு "சரி" என்று சம்மதித்தான். உடனþ ஐந்து சீடர்களும் போட்டி போட்டுக் கொண்டு, மடத்தில் இருந்த துணிமணிகள், சுருட்டு, பணம் பூராவையும் எடுத்து வந்தனர்.

"போகும் வழியில் சாப்பிடுங்கள்" என்று புளி சாதம் தந்தான் மட்டி.

எல்லாவற்றையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்ட புளுகன், சொர்க்கம் போவதாகக் கூறி விட்டு, ஓட்டம் பிடித்தான்.

வெளியே சென்றிருந்த பரமார்த்தர் திரும்பி வந்தார். "குருவே! நீங்கள் இல்லாத சமயத்தில் கூட, நாங்கள் புத்திசாலித்தனமான செயல் செய்துள்ளோம்" என்று பெருமையோடு சொன்னான் மண்டு.

உங்கள் "குருநாதரான சோற்று மூட்டை சுவாமிக்கு இனி கவலையே இல்லை!" என்றான் மூடன்.

"சொர்க்கத்தில் இருந்து ஆள் அனுப்பி இருந்தார். அவரிடம் உங்கள் குருவுக்குத் தேவையானதை எல்லாம் கொடுத்து அனுப்பினோம்!" என்று முட்டாள் சொன்னான்.

பரமார்த்த குருக்கோ ஒன்றும் விளங்கவில்லை. தாங்கள் செய்த காரியத்தை சீடர்கள் விளக்கியதும், "அடப்பாவிகளா! ஏன் இப்படிச் செய்தீர்கள்?" எனக் குதித்தார்.

"நாங்கள் நல்லது தானே செய்தோம்?" உங்கள் குருநாதர் பசியால் வாடலாமா?" என்று மட்டி கேட்டான்.

"முட்டாள்களே! எனக்குக் குருநாதரே யாரும் கிடையாது! இது தெரியாதா உங்களுக்கு? எவனோ உங்களை நன்றாக ஏமாற்றி விட்டுப் போய் விட்டானே!" என்று பரமார்த்தர் சொன்னதும், சீடர்கள் எல்லோரும் "திரு திரு" என்று விழித்தார்கள்.

"சீடர்களே! நீங்கள் ஏமாந்ததும் ஒரு வகையில் நல்லது தானே! அதே திட்டத்தைப் பயன்படுத்தி, நம் ஊர் அரசனை நாம் ஏமாற்றி விடலாம்!" என்றார் பரமார்த்தர்.

அப்போதே குருவும், சீடர்களும் அரண்மனைக்குப் போனார்கள்.

"மன்னா! நாங்கள் நேற்று ராத்திரி சொர்க்கம் போய் வந்தோம். அங்கே எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். ஆனால் உங்கள் தாத்தா மட்டும் பிச்சை எடுத்துத் திரிகிறார்!" என்று புளுகினார்.

"ஆமாம் அரசே! ராஜ குடும்பத்தில் பிறந்தவர் இப்படிப் பிச்சை எடுக்கலாமா?" என்று மட்டி கேட்டான்.

மடையனோ, "அவரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது!" என்றான்.

"நாங்கள் மறுபடியும் நாளைக்குச் சொர்க்கலோகமம் போகப் போகிறோம். ஏராளமாகப் பணமும் துணியும் உங்களிடம் இருந்து வாங்கி வரச் சொன்னார்!" என்று புளுகினான் முட்டாள்.

"அப்படியே உயர்ந்த இனக் குதிரையாக இரண்டு வாங்கி வரச் சொன்னார்" என்று தள்ளி விட்டான், மண்டு.

"எல்லாவற்றையும் எங்களிடம் தந்து விடுங்கள். நாங்கள் பத்திரமாகக் கொண்டு போய்க் கொடுத்து விடுகிறோம்!" என்றார் பரமார்த்தர்.

அரசனுக்கோ, கோபம் கோபமாக வந்தது.

"யாரங்கே! இந்த ஆறு முட்டாள்களையும், ஆறு நாளைக்குச் சிறையில் தள்ளுங்கள்!" என்று கட்டளை இட்டான்.

"அரசே! நாங்கள் என்ன தவறு செய்தோம்? செத்துப்போன உங்கள் தாத்தாதான் எங்களை அனுப்பினார்!" என்று ஏமாற்ற நினைத்தார், பரமார்த்த குரு.

அரசனோ, "யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? இன்னும் என் தாத்தா சாகவே இல்லையே! இதோ உயிரோடு தான் இருக்கிறார்!" என்று சொன்னபடி பக்கத்தில் அமர்ந்திருந்த தாத்தாவைக் காட்டினான்.

"ஐயையோ! அரசரின் தாத்தா செத்து விட்டாரே இல்லையா என்று தெரிந்து கொள்ளாமலேயே இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே!" என்று குருவும் சீடர்களும் அழுதனர்.

பெரியதை எடு!









பெரியதை எடு!

உழவன் ஒருவன் வீட்டில் வெள்ளாடும் செம்மறி ஆடும் இருந்தன. அவை இரண்டும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. எங்கே சென்றாலும் ஒன்றாகவே சென்றன.

தோட்டத்தில் விளையும் செடிகளை எல்லாம் அவை கடித்து நாசம் செய்தன.
கோபம் கொண்ட உழவன், நீங்கள் இனிமேல் இங்கே இருக்கக் கூடாது. இருந்தால் உங்களைக் கொன்று விடுவேன். எங்காவது போய் விடுங்கள், என்று விரட்டினான்.

இரண்டு ஆடுகளும் தங்கள் பொருள்களை ஒரு சாக்குப் பையில் போட்டன. அந்தப் பையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டன.

செம்மறி ஆடு வலிமை உள்ளதாக இருந்தது. ஆனால் கோழையாக இருந்தது.
மாறாக வெள்ளாடோ வீரத்துடன் விளங்கியது. ஆனால் வலிமை இல்லாமல் இருந்தது.
சிறிது தூரம் நடந்த இரண்டும் ஒரு வயலை அடைந்தன. அங்கே இறந்து போன ஓநாய் ஒன்றின் தலை கிடந்தது.
அந்த ஓநாயின் தலையை எடுத்துக் கொள். நீதான் வலிமையுடன் இருக்கிறாய், என்றது வெள்ளாடு.

என்னால் முடியாது நீதான் வீரன். நீயே எடு, என்றது செம்மறி ஆடு.
இரண்டும் சேர்ந்து அந்த ஓநாயின் தலையைச் சாக்கிற்குள் போட்டன.
சாக்கைத் தூக்கிக் கொண்டு இரண்டும் நடந்தன. சிறிது தொலைவில் நெருப்பு வெளிச்சத்தை அவை பார்த்தன.
அந்த நெருப்பு எரிகின்ற இடத்திற்குப் போவோம். குளிருக்கு இதமாக இருக்கும். ஓநாய்ளிடம் இருந்தும் நாம் தப்பித்துக் கொள்ளலாம், என்றது வெள்ளாடு.

இரண்டும் நெருப்பு இருந்த இடத்தை நோக்கி நடந்தன. அருகில் சென்றதும் அவை அதிர்ச்சி அடைந்தன.
அங்கே மூன்று ஓநாய்கள் உணவு சமைத்துக் கொண்டிருந்தன.

ஓநாய்கள் தங்களைப் பார்த்து விட்டன. தப்பிக்க வழியில்லை, என்பதை உயர்ந்தன ஆடுகள்.

நண்பர்களே! நீங்கள் நலந்தானே என்று தைரியத்துடன் கேட்டது வெள்ளாடு.

அச்சத்தால் செம்மறி ஆட்டின் கால்கள் நடுங்கின.

நண்பர்களா நாய்கள்? எங்கள் உணவு தயார் ஆகட்டும். அதன் பிறகு உங்களைக் கவனிக்கிறோம். எங்கே ஓடிவிடப் போகிறீர்கள்? என்றது ஒரு ஓநாய்.

இவற்றிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தது வெள்ளாடு.

செம்மறி ஆடே! இன்று நாம் கொன்றோமே ஓநாய்கள். அவற்றில் ஒன்றின் தலையை எடுத்து இவர்களிடம் காட்டு. நாம் யார் என்பது புரியும்? என்று உரத்த குரலில் சொன்னது அது.
செம்மறி ஆட்டிற்கு அதன் திட்டம் புரிந்தது. சாக்கிற்குள் கையை விட்டு ஓநாயின் தலையை எடுத்தது.
ஏ! முட்டாள் ஆடே! பெரிய ஓநாயின் தலையை எடுத்துக் காட்டு என்றேன். நீ சிறிய தலையை எடுத்துக் காட்டுகிறாயே, பெரியதை எடு, என்று கத்தியது வெள்ளாடு.

அந்தத் தலையைச் சாக்கிற்குள் போட்டது செம்மறி ஆடு. மீண்டும் அதே தலையை வெளியே எடுத்துக் காட்டியது.
கோபம் கொண்டது போல் நடித்தது வெள்ளாடு. இருக்கின்ற ஓநாய்த் தலைகளில் பெரியதை எடு. மீண்டும் நீ சிறிய தலைகளையே எடுத்துக் காட்டுகிறாய். இதைப் போட்டுவிட்டு பெரிய தலையாக எடு, என்று கத்தியது.
அந்தத் தலையைப் போட்டுவிட்டு அதே தலையை மீண்டும் வெளியே எடுத்தது செம்மறி ஆடு.
இதைப் பார்த்த மூன்று ஓநாய்களும் நடுங்கின.

இவை சாதாரண ஆடுகள் அல்ல. நீ அவற்றைக் கேலி செய்திருக்கக் கூடாது. சாக்கிற்குள் இருந்து ஒவ்வொரு ஓநாய்த் தலையாக எடுக்கின்றன, என்றது ஒரு ஓநாய்.
மூன்றும் சிறிது நேரம் அமைதியாக இருந்தன.

ஆடுகளைப் பார்த்து ஓநாய் ஒன்று, உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, குழம்பு நன்றாகக் கொதிக்கிறது, இன்னும் சிறிது தண்ணீர் ஊற்ற வேண்டும், நான் சென்று தண்ணீர் கொண்டு வருகிறேன், என்று புறப்பட்டது.
சிறிது நேரம் சென்றது. இரண்டாவது ஓநாய், அந்த ஓநாயிற்கு நம் அவசரமே தெரியாது. போய் எவ்வளவு ஆகிறது? நான் சென்று அதை அழைத்துக் கொண்டு தண்ணீருடன் வருகிறேன், என்று புறப்பட்டது.

பரபரப்புடன் இருந்த மூன்றாவது ஓநாய், இருவரும் எங்கே தொலைந்தார்கள்? நான் சென்று அவர்களை அழைத்து வருகிறேன் என்று புறப்பட்டது. தப்பித்தோம் என்ற மகிழ்ச்சியில் ஓட்டம் பிடித்தது

செம்மறி ஆடே! நம் திட்டம் வெற்றி பெற்று விட்டது. ஓநாய்களிடம் இருந்து தப்பித்து விட்டோம். விரைவாகச் சாப்பிட்டுவிட்டு இங்கிருந்து புறப்படுவோம். உண்மை தெரிந்து மீண்டும் அவை இங்கே வரும், என்றது வெள்ளாடு.
இரண்டும் அங்கிருந்த உணவை வயிறு முட்ட உண்டன. மகிழ்ச்சியுடன் ஏப்பம் விட்டுக் கொண்டே புறப்பட்டன.
ஓடிய மூன்று ஓநாய்களும் வழியில் சந்தித்தன.

ஆடுகளுக்குப் பயந்தா நாம் ஓடி வருவது? என்று கேட்டது ஒரு ஓநாய்.

நம்மை அவை ஏமாற்றி இருக்கின்றன. நாமும் ஏமாந்து விட்டோம், என்றது இன்னொரு ஓநாய்.

மூன்றாவது ஓநாய், நாம் உடனே அங்கு செல்வோம், அவற்றைக் கொன்று தின்போம், என்றது.
மூன்று ஓநாய்களும் அங்கு வந்தன. உணவை உண்டு விட்டு இரண்டு ஆடுகளும் ஓடி விட்டதை அறிந்தன.

ஏமாந்து போன ஓநாய்கள் பற்களை நறநறவென்று கடித்தன. பாவம் அவற்றால் வேறு என்ன செய்ய முடியும்?

இரண்டு புலிக்கு எங்கே போவேன்?

இரண்டு புலிக்கு எங்கே போவேன்?

ஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வணிகத்திற்காக வெளியூர் சென்றிருந்தான்.

பல நாட்களுக்குப் பிறகு அவனிடமிருந்து கடிதம் வந்தது. நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள். நாம் வளமாக வாழலாம், என்று அதில் எழுதியிருந்தது.

தன் குழந்தைகளுடன் மாட்டு வண்டியில் ஏறினாள் அவள். வண்டியை ஓட்டிக் கொண்டு புறப்பட்டாள்.
அடர்ந்த காட்டு வழியாக வண்டி சென்று கொண்டிருந்தது. ஆபத்து வரப் போவதை மாடுகள் உணர்ந்தன. கயிற்றை அறுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தன.

ஐயோ! என்ன செய்வேன்? நடுக் காட்டில் குழந்தைகளுடன் சிக்கிக் கொண்டேனே! இங்கே புலி பலரை அடித்துக் கொன்றதாகக் கேள்விப் பட்டுள்ளேனே, என்று நடுங்கினாள் அவள்.

அருகிலிருந்த மரத்தின் கிளையில் குழந்தைகளுடன் அமர்ந்தாள் அவள்.

சிறிது தூரத்தல் பயங்கரமான புலி ஒன்று வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த அவள் அதனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தாள்.
நல்ல வழி ஒன்று அவளுக்குத் தோன்றியது.

இரண்டு குழந்தைகளின் தொடையிலும் அழுத்திக் கிள்ளினாள். இருவருடம் காடே அலறும் படி அழத் தொடங்கினார்கள்.

குழந்தைகளே! அழாதீர்கள், நான் என்ன செய்வேன். இப்படி நீங்கள் அடம் பிடிப்பது சிறிதும் நல்லது அல்ல. நேற்றுத்தான் நீங்கள் உண்பதற்கு ஆளுக்கொரு புலி பிடித்துக் கொடுத்தேன். இன்றும் அதே போல ஆளுக்கொரு புலி வேண்டும் என்கிறீர்களே. இந்தக் காட்டில் புலியை நான் எங்கே தேடுவேன்? எப்படியும் இன்று மாலைக்குள் நீங்கள் சாப்பிட ஆளுக்கொரு புலி தருகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள், என்று உரத்த குரலில் சொன்னாள்.

இதைக் கேட்ட புலி நடுங்கியது, நல்ல வேளை! அருகில் செல்லாமல் இருந்தேன். இந்நேரம் நம்மைப் பிடித்துக் கொன்றிருப்பாள், இனி இங்கே இருப்பது நல்லதல்ல, எங்காவது ஓடிவிடுவோம், என்று நினைத்தது அது.
ஒரே பாய்ச்சலாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது அது.

தன் திட்டம் வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்ந்தாள் அவள்.

பயந்து ஓடும் புலியை வழியில் சந்தித்தது நரி. காட்டுக்கு அரசே! ஏன் இப்படி அஞ்சி ஓடுகிறீர்கள்? உங்களைவிட வலிமை வாய்ந்தது சிங்கம் தான். நம் காட்டில் சிங்கம் ஏதும் இல்லை. என்ன நடந்தது? சொல்லுங்கள், என்று கேட்டது அது.

நரியே! நம் காட்டுக்கு ஒரு அரக்கி வந்துள்ளாள். இரண்டு குழந்தைகள் அவளிடம் உள்ளன. அந்தக் குழந்தைகள் உண்ண நாள்தோறும் ஆளுக்கொரு புலியைத் தருகிறாளாம். இப்படி அவளே சொல்வதை என் காதால் கேட்டேன். அதனால் தான் உயிருக்குப் பயந்து ஓட்டம் பிடித்தேன், என்றது புலி.

இதைக் கேட்ட நரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. புலியாரே! கேவலம் ஒரு பெண்ணிற்குப் பயந்தா ஓடுகிறீர்? அவள் உங்களை ஏமாற்றி இருக்கிறாள். எங்காவது மனிதக் குழந்தைகள் புலியைத் தின்னுமா? வாருங்கள். நாம் அங்கே செல்வோம். அவளையும் குழந்தைகளையும் கொன்று தின்போம், என்றது அது.
அந்தக் குழந்தைகளின் கத்தலை நீ கேட்டிருந்தால் இப்படிப் பேச மாட்டாய். அந்த அரக்கியின் குரல் இன்னும் என் காதில் கேட்கிறது. நான் அங்கு வர மாட்டேன், என்று உறுதியுடன் சொன்னது புலி.

அவள் சாதாரண பெண்தான். உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதற்காக உங்கள் வாலையும் என் வாலையும் சேர்த்து முடிச்சுப் போடுவோம். பிறகு இருவரும் அங்கே சென்று பார்ப்போம். உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. நம் இருவர் பசியும் தீர்ந்து விடும், என்றது நரி.

தயக்கத்துடன் ஒப்புக் கொண்டது புலி.

இருவர் வாலும் சேர்த்து இறுகக் கட்டப்பட்டன. நரி முன்னால் நடந்தது. புலி தயங்கித் தயங்கிப் பின்னால் வந்தது.
மரத்தில் இருந்த அவள் நரியும் புலியும் வருவதைப் பார்த்தாள். இரண்டின் வாலும் ஒன்றாகக் கட்டப்பட்டு இருந்தது. அவளின் கண்களுக்குத் தெரிந்தது. என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்தாள் அவள்.

கோபமான குரலில், நரியே! நான் உன்னிடம் என்ன சொன்னேன்? என் குழந்தைகள் பசியால் அழுகின்றன. ஆளுக்கொரு புலி வேண்டும் என்றேன். இரண்டு புலிகளை இழுத்து வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றாய். இப்பொழுது ஒரே ஒரு புலியுடன் வருகிறாள் எங்களை ஏமாற்றவா நினைக்கிறாய்? புலியுடன் உன்னையும் கொன்று தின்கிறேன், என்று கத்தினாள்.

இதை கேட்ட புலி நடுங்கியது, இந்த நரிக்குத்தான் எவ்வளவு தந்திரம்? நம்மை ஏமாற்றித் தன் வாலோடு கட்டி இழுத்து வந்திருக்கிறதே. நாம் எப்படிப் பிழைப்பது? ஓட்டம் பிடிப்பது தான் ஒரே வழி, என்று நினைத்தது அது.
அவ்வளவுதான். வாலில் கட்டப்பட்டு இருந்த நரியை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கியது.

நரியோ, புலியாரே! அவள் நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறாள். ஓடாதீர்கள், என்று கத்தியது.
உன் சூழ்ச்சி எனக்குப் புரிந்துவிட்டது. என்னைக் கொல்லத் திட்டம் போட்டாய். இனி உன் பேச்சை கேட்டு ஏமாற மாட்டேன், என்று வேகமாக ஓடத் தொடங்கியது புலி.

வாலில் கட்டப்பட்டிருந்த நரி பாறை, மரம், முள்செடி போன்றவற்றில் மோதியது. படுகாயம் அடைந்தது அது. புலியோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் நரியை இழுத்துக் கொண்டு ஓடியது. வழியில் நரியின் வால் அறுந்தது. மயக்கம் அடைந்த நரி அங்கேயே விழுந்தது. புலி எங்கோ ஓடி மறைந்தது.

பிறகு அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் பாதுகாப்பாகக் கணவனின் ஊரை அடைந்தாள்.

தவளைக் குட்டிச் சீடன்








தவளைக் குட்டிச் சீடன்

முட்டாளும் மூடனும் தவிர பரமார்த்த குருவும் மற்ற சீடர்களும் ராஜ வீதியில் காத்திருந்தனர். அந்த நாட்டு மன்னன் தேரில் ஊர்வலமாக வந்து கொண்டு இருந்தான்.


தங்கள் அருகே தேர் வந்ததும், கையில் தயாராக வைத்திருந்த செத்துப் போன தவளையையும், ஓணானையும் தேரின் சக்கத்தில் போட்டான், மட்டி.

அதன் மீது சக்கரம் ஏறி நகர்ந்ததும், நசுங்கிப் போன தவளையையும் ஓணானையும் தூக்கி வந்தான், மடையன்.

பரமார்த்தர், தேருக்கு முன்னால் சென்று, ஐயோ! என் சீடர்களைக் கொன்று விட்டாயே! இது தான் நீ குடிமக்களைக் காப்பாற்றும் முறையா? என்று கூச்சலிட்டார்.

மட்டியும் மடையனும் சேர்ந்து கொண்டு, ஐயோ, கொஞ்ச நேரத்துக்கு முன்னால் எங்களோடு சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தீர்கள். அதற்குள் இப்படி நசுங்கிக் கூழ் கூழாக ஆகிவிட்டீர்களே! என்று ஒப்பாரி வைத்தனர்.

அரசனுக்கும் அமைச்சர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. யாரைக் கொன்றேன்? எனக் கேட்டான், மன்னன்.

என் அருமையான சீடர்களான முட்டாளையும், மூடனையும் நீதான் தேர் ஏற்றிக் கொன்று விட்டாய்! என்று குற்றம் சாட்டினார், குரு.

அப்படியானால் எங்கே அவர்கள் உடல்கள்? என்று மந்திரி கேட்டார்.

இதோ இவைதான் என்றபடி, நசுங்கிப் போன தவளையையும், ஓணானையும் காட்டினார், பரமார்த்தர்!

எல்லோருக்கும் வியப்பாக இருந்தது.

இது தவளை அல்லவா? இந்தக் தவளையா உன் சீடன்? எனக் கேட்டான், மன்னன்.

இது ஓணான்! இதுவா உன் சீடன்? யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? என்று கோபமாகக் கேட்டார், ஓர் அமைச்சர்.

அரசே! நான் எதற்கு உன்னை ஏமாற்ற வேண்டும்? உண்மையாகவே இந்தத் தவளையும் ஓணானும் என் சீடர்கள்தாம். நம்மைப் போல மனிதர்களாகத்தான் இவர்கள் இருந்தார்கள். ஒரு மந்திரவாதியின் சாபத்தால் இப்படி ஆகிவிட்டார்கள்! என்று பொய் கூறினார், பரமார்த்தர்.

தவளைதான் என்றாலும் மனிதர்களைப் போலவே பேசுவான்! ஓணான்தான் என்றாலும் தினம் நூறு பொற்காசு சம்பாதித்துக் கொண்டு வந்து கொடுப்பான்! என்று புளுகினான் மண்டு.

இதைக் கேட்டு, அரசனுக்கும் மந்திரிகளுக்கும் பெரும் சங்கடமாக இருந்தது.

சரி... நடந்தது நடந்து விட்டது. இப்போது என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார், அமைச்சர்.

என்ன செய்வதா? இவர்களை வைத்துத்தானே எங்கள் பிழைப்பே நடந்தது. அதனால், மறுபடியும் இதே தவளைக்கும் ஓணானுக்கும் உயிர் கொடுங்கள். இல்லாவிட்டால், தினம் நூறு பொற்காசுகளை நீங்கள் தான் தர வேண்டும், என்றார் பரமார்த்தர்.

வேறு வழி தெரியாத மன்னன், மறுபடியும் உயிர் கொடுக்க முடியாது. அதனால் தினம் நூறு பொற்காசு தந்து விடுகிறேன், என்று ஒப்புக் கொண்டான்.

மடத்துக்கு வந்ததும், செத்துப் போன தவளையையும் ஓணானையும் காட்டி ராஜாவையே ஏமாற்றி விட்டோம்! இனிமேல் தினமும் நூறு பொற்காசு கிடைக்கப் போகிறது, என்று குதித்தார்கள்.

முட்டாளையும் மூடனையும் பார்த்து, நீங்கள் இரண்டு பேரும் செத்து விட்டதாகக் கூறி விட்டோம். ஆகையால் இனிமேல் மடத்தை விட்டு வெளியே போகவே கூடாது. தப்பித் தவறி வெளியே போனீர்களானால் மாட்டிக் கொள்வோம். ஜாக்கிரதை! என்று எச்சரிக்கை செய்தார், குரு.

ஒரே வாரம் கழிந்தது. இரவு நேரத்தில் எல்லோரும் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருந்தனர்.

முட்டாளும் மூடனும் மட்டும் விழித்துக் கொண்டனர். சோ! ஊர் சுற்றி ஒரு வாரம் ஆகிறது! யாருக்கும் தெரியாமல் ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டு வந்து விடலாம்! என்று ஆசைப்பட்டனர்.

கையில் கொள்ளிக் கட்டையுடன் இருவரும் வெளியே புறப்பட்டனர். இரண்டு தெரு சுற்றுவதற்குள், இரவுக் காவலர்கள் கண்ணில் பட்டு விட்டனர்!

உடனே இருவரையும் துரத்திப் பிடித்தனர். பொழுது விடிந்ததும், மற்ற சீடர்களும் குருவும் கைது செய்யப்பட்டனர்.

ஆளை உயிரோடு வைத்துக் கொண்டே செத்து விட்டதாக ஏமாற்றினீர்கள். அதனால், இப்போது உண்மையாகவே இவர்கள் இருவரையும் தேர் ஏற்றிச் சாகடிக்கப் போகிறேன்! என்றான், மன்னன்.

அதைக் கேட்ட குருவும் சீடர்களும், அலறினார்கள். ஐயோ, மன்னா! தெரியாமல் செய்து விட்டோம். உங்களிடம் இருந்து வாங்கிய பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுகிறோம். மன்னித்து விட்டு விடுங்கள், என்று அரசனின் கால்களில் விழுந்தார்.

சீடர்களும் கீழே விழுந்து வேண்டினார்கள்.

மன்னனும் போனால் போகிறது என்று மன்னித்து அனைவரையும் விடுதலை செய்தான்!